பதிவு செய்த நாள்
30
ஜன
2017
02:01
கிருஷ்ணகிரி: பர்கூரில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, 1,000க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் கோழிகள் பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு அடுத்த ஞாயிற்றுக் கிழமை மாரியம்மன் கோவில் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி நேற்று நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, மாரியம்மன் கோவில் அருகே, 1,000க்கும் அதிகமான ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு, பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். முன்னதாக நேற்று காலை, 500க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து சென்றனர். இந்த ஊர்வலத்தில், கோலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் மயிலாட்ட கலைஞர்களின் நடனம் நடந்தது. பின் கோவிலில் பொங்கலிட்டு, மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின், தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விருந்தளித்தனர். விழாவையொட்டி, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.