பதிவு செய்த நாள்
31
ஜன
2017
12:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நெருங்கும் நிலையில், அச்சடிக்கப்பட்ட பத்திரிக்கையை வினியோகம் செய்யாமல், கோவில் நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. விழாவிற்காக அச்சடிக்கப்பட்ட போஸ்டர்களும், எங்கும் ஒட்டாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, பிப்., 6ல் நடக்கிறது. இதற்காக முக்கியஸ்தர்கள், பக்தர்களுக்கு வழங்க, 25 ஆயிரம் பத்திரிக்கை மற்றும், 15 ஆயிரம் போஸ்டர்கள், உபயதாரர்கள் மூலம் அச்சடித்து கொடுக்கப்பட்டது. ஆனால், கும்பாபிஷேக பத்திரிக்கை, குறைந்த அளவில் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டது. மற்ற பத்திரிகைகள் அலுவலக அறையில் வைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேக போஸ்டர், திருவண்ணாமலை நகரிலோ, கிராமங்களிலோ இதுவரை ஒட்டவில்லை. பக்தர்கள் தானாக முன்வந்து கேட்டாலும், போஸ்டர்களை கொடுக்காமல், கோவில் நிர்வாகம் திருப்பி அனுப்புகிறது. கோவில் கும்பாபிஷேகம் எப்போது நடக்கிறது என்பதை, பத்திரிக்கை வினியோகம் செய்தும், போஸ்டர் ஒட்டியும் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இதை கோவில் நிர்வாகம் செய்யாததால், எந்த தேதியில், எந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடக்கிறது என்ற விபரம், உள்ளூர் மக்களுக்கே தெரியாத நிலை உள்ளது. இதனால், கும்பாபிஷேக பூஜையில், பக்தர்கள் கூட்டமின்றி, வெறிச்சோடி காணப்படுகிறது.