பதிவு செய்த நாள்
02
பிப்
2017
11:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், நாடு செழிக்கவும், ஜீவராசிகள் நலம் பெற வேண்டியும், விசேஷ சந்தி பூஜை நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், இன்று (பிப்., 2) பரிவார மூர்த்திகளுக்கு, காலை, 9:00 முதல், 10:30 மணிக்குள் மீன லக்னத்தில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. வரும், 6ல், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மற்றும், ஒன்பது கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம், முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. இதில் நேற்று காலை, 9:05 மணிக்கு கோவில், நான்காம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில், சிவச்சாரியார்கள் அனைவரும் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் அளித்து, கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடக்கவும், நாடு செழிக்கவும், நாட்டு மக்கள், ஜீவராசிகள் எல்லா வளமும், நலமும் பெற விசேஷமாக செய்யப்படும் விசேஷ சந்தி பூஜை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை, 11:45 மணிக்கு பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து மாலை, 4:30 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை துவங்கி, இரவு, 9:00 மணிக்கு பூர்ணாஹூதி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.