பதிவு செய்த நாள்
02
பிப்
2017
03:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் வெள்ளி மயில் வாகனத்தை புதுப்பிக்காமல், கருப்பு நிறத்தில் வீதி உலா வருவதால், பக்தர்கள் வேதனையடைந்தனர். ராமநாதசுவாமி கோயிலில் மாசி, ஆடித்திருக்கல்யாணம் மற்றும் தை, மாசி, ஆடி அமாவாசை விமரிசையாக நடக்கும். இவ்விழாவில் தங்கம், வெள்ளி மயில், ரிஷபம், கருட வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கும். அப்போது கோயில் ரதவீதியில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி, அம்மன் ஜொலிக்கும் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் காட்சியை கண்டு, பரவசம் அடைவார்கள்.
அலட்சியம்: ஆனால் விழா முடிந்த பிறகு தங்கம், வெள்ளி வாகனங்களை பராமரிக்காமல், கோயில் ஊழியர்கள் கிடப்பில் போடுகின்றனர். பின், அடுத்த சில மாதங்களுக்கு பிறகு துவங்கும் விழாவில் வெள்ளி வாகனங்கள் கரும் நிறத்தில் மாறி, பொலிவு இழந்து வீதி உலா வருகிறது. பல நுõறு கோடி மதிப்புள்ள கோயில் வாகனங்களை பராமரிப்பு இன்றி உள்ளதை காணும் பக்தர்கள், அதிர்ச்சி அடைகின்றனர். இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்: தங்கம், வெள்ளி வாகனங்கள் ரசாயண பவுடர், புளிகாப்பு மூலம் சுத்தம் செய்து பராமரிக்கப்படுகிறது. கரும் நிறத்தில் உள்ள வாகனங்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.