பதிவு செய்த நாள்
03
பிப்
2017
12:02
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கால பைரவரை, சூரிய பகவான் தன் கதிர்களால் ஆண்டுக்கு ஒரு முறை பூஜிக்கும் அபூர்வ நிகழ்வை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ராமநாதபுரத்தில் 300 ஆண்டு பழமை வாய்ந்த மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. இங்கு சிவன், முருகன், விநாயகர், காலபைரவர், தட்சணாமூர்த்தி, துர்க்கை, நடராஜர், மகாலட்சுமி, பரிவாரங்களுடன், கோதண்டராமர், ஜெயவீர ஆஞ்சநேயர், ஆழ்வார் சன்னதிகள் உள்ளன. அனைத்து தெய்வங்களுக்கும் விழா கால சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இங்குள்ள கால பைரவரை சூரிய பகவான் தன் கதிர்களால் ஆண்டுக்கு ஒரு முறை பூஜிக்கும் அற்புத நிகழ்வு நடக்கிறது.
பிப்., முதல் வாரத்தில் 5 நாள் நிகழ்வில் 3ம் நாளாக கால பைரவர் சிலை மீது சூரிய கதிர் விழுந்தது. பாதம் துவங்கி தலை மீது விழும் போது ஓம் சிவாய நமஹ என்ற ஸ்லோகத்தை பக்தர்கள் உச்சரித்தனர். பைரவர் தலை மீது சூரிய கதிர் விழுந்து பிரகாசித்தது. இதன் பிறகு தீபாராதனை நடந்தது. இது குறித்து கோயில் ஸ்தானீகர் மனோகர குருக்கள் கூறியதாவது: சேதுபதி மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு தேவஸ்தான சமஸ்தானத்திற்கு பாத்தியமான இக்கோயிலில் நான்காண்டுகளுக்கு முன்பு பிப்.,ல் துர்க்கைக்கு பூஜை செய்து கொண்டிருந்தேன். அப்போது மின்சாரம் தடைபட்டது. பேட்டரி விளக்கு ஒளி போல் கால பைரவர் முகத்தில் சூரியக்கதிர் வட்டமாக விழுந்தது. மறு நாளும் இதே போல் 5 நாட்கள் விழுந்தது. பாதம் துவங்கி படிப்படியாக தலை வரை வந்து மறையும் அற்புத நிகழ்வு ஆண்டுக்கொரு முறை நடக்கும் அபூர்வ நிகழ்வு நேற்று மாலை 4:49 மணிக்கு துவங்கி 5:14 மணிக்கு முடிந்தது. இதே போல் ஆக., ல் சிவன் கருவறையில் காலை 6: 30 மணி முதல் 7:30 மணி வரை சூரிய கதிர் விழும். தமிழகத்தில் வேறெந்த கோயிலிலும் சூரியக்கதிர் 5 நாள் விழுவதில்லை. மதுரை முத்தீஸ்வரர் கோயிலில் சிவன் மீது ஒரு நாள் மட்டும் சூரிய கதிர் விழுகிறது. இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றால் நினைத்தது நிறைவேறும் என்பது ஜதீகம், என்றார்.