தேவகோட்டை: தேவகோட்டையில் இருந்து பழநிக்கு தைப்பூச விழாவிற்கு500 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வழிபடுகின்றனர். இந்த ஆண்டு பிப். 9 ந்தேதி தைப்பூச விழா நடக்க உள்ளநிலையில் வழிபாட்டுக்கான பாதயாத்திரை தேவகோட்டையிலிருந்து நேற்று புறப்பட்டது. முன்னதாக நேற்றுமுன்தினம் நகர் வலம் வந்த நகரத்தார் காவடிகள் சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் தங்கினர். முதலில் செலுத்தப்படும் முதல்காவடியான முதலியார் காவடியும் கோயிலை வந்தடைந்தது. நேற்று அதிகாலை 41 காவடிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டன. இதனை தொடர்ந்து காவடிகள் , வேலின் (செப்பு ) துணையோடு யாத்திரை புறப்பட்டது. காவடிகளுக்கு நால்வர் கோயில் அருகே நிர்வாகி அருசோமசுந்தரம் தலைமையில் வரவேற்பும், பூஜைகளும் நடந்தன. அதனை தொடர்ந்து துாயமரியன்னை பள்ளி அருகே நகரத்தாருக்கும், மக்களுக்கும் பிரியாவிடை கொடுத்து காவடிகள் புறப்பட்டன.