ராமேஸ்வரம் :உலக நன்மைக்காக ராமேஸ்வரத்தில் நாளை(பிப்.,4) 108 பசுக்களுடன் கோ, சோம யாக பூஜைகள் நடக்கின்றன.பசு மாடுகளை பாதுகாப்பதன் மூலம் நீர் நிலைகள் நிரம்பும், இயற்கை உரங்கள் பெருகி விவசாயம் செழிக்கும் என, கோ சேவா சமிதி சார்பில் நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படுகிறது. கோ பூஜை செய்தால் நாட்டில் அமைதி, நன்மை பெருகும் என்பதால் ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாத சுவமி கோயில் அருகே 108 யாக குண்டங்கள் அமைத்து, 108 பசுமாடுகளுடன் நாளை காலை கோ பூஜை நடக்கிறது. தொடர்ந்து மாலை 108 சோம யாக பூஜை நடக்கிறது. அகில இந்திய கோ சேவா சமிதி தலைவர் சங்கர்லால் கூறியதாவது:நாளை 108 நாட்டு பசு மாடுகளுடன் கோ பூஜை துவங்குகிறது. தொடர்ந்து 108 குண்டத்தில் 108 கிலோ நெய் ஊற்றி சோம யாக பூஜை நடக்கும். இதன் மூலம் ஓசோன் படலத்தில் துாய காற்று உருவாகி, மழை பொழிந்து விவசாயம் செழிக்கும். இதுபோன்ற யாக பூஜை 2018ல் ஆந்திரா ஸ்ரீசைலத்தில் நடக்க உள்ளது, என்றார்.