பழநியில் குவியும் தைப்பூச பக்தர்கள் ரயிலுக்காக 8 மணிநேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2017 12:02
பழநி:தைப்பூச விழாவை முன்னிட்டு பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள் காலை 8:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, ரயிலில் செல்ல எட்டுமணி நேரம் காத்து கிடக்கின்றனர்.பழநியில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரை, சென்னை, திருச்செந்துாருக்கு இயக்கப்பட்ட ரயில்கள், தற்போது பாலக்காடு டவுன் பொள்ளாச்சில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் சாதாரண நாட்களிலும் ரயில்களில் இடம் கிடைக்காமல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். எட்டுமணி நேரம் காத்திருப்பு: பழநியில் இருந்து மதுரைக்கு காலை 7:50 மணிக்கு திருச்செந்துார் ரயில் மதுரை வழியாக இயக்கப்படுகிறது. அதன்பின் மாலை 4:30மணிக்கு தான் பயணிகள் ரயில் பழநியில் இருந்து மதுரைக்கு இயக்கப்படுகிறது. தைப்பூச விழாவை முன்னிட்டு தென் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு வந்த வண்ணம் உள்ளனர். கட்டணம் குறைவு காரணமாக பக்தர்கள் ரயிலில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் காலை7:50மணி ரயிலை தவறவிடும் பக்தர்கள்8 மணிநேரம் காத்திருந்து பொள்ளாச்சி- மதுரை செல்லும் ரயிலை பிடிக்க வேண்டியுள்ளது. இதிலும் இடம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா: கடந்த தைப்பூச விழாவிற்கு பழநி- காரைக்குடி வரை சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே சார்பில் இயக்கப்பட்டது. இவ்வாண்டு தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்சேவை குறித்து அறிவிப்பையும் ரயில்வே நிர்வாகம் வெளியிடாமல் உள்ளது. இது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. கடந்த ஆண்டைபோல சிறப்பு ரயில்கள் இயக்க தென்னக ரயில்வே முன்வர வேண்டும்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ ரயில் இயக்க கோயில் நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். தைப்பூசம், அதற்கு முதல் நாள் மதுரை வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படலாம், அல்லது கூடுதல் பெட்டிகள் இணைக்க வாய்ப்புஉள்ளது,”என்றார்.