பதிவு செய்த நாள்
06
பிப்
2017
01:02
வடலுார்: வடலுார் சத்திய ஞானசபையில், தைப்பூச ஜோதி தரிசன விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆய்வு செய்தனர். கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 146வது தைப்பூச ஜோதி தரிசன விழா, வரும் 9ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி, கடந்த ஏழு நாட்களாக தருமச்சாலையில் மகாமந்திரம் ஓதுதல், ஞான சபையில் திரு அருட்பா முற்றோதல் நடைபெற்று வருகிறது. வரும் 8ம் தேதி காலை 10:00 மணிக்கு தருமச்சாலை, வள்ளலார் பிறந்த மருதுார், வள்ளலார் தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி மற்றும் ஞானசபை ஆகிய இடங்களில் சன்மார்க்க கொடியேற்றப்படுகிறது.
9ம் தேதி தைப்பூசத்தன்று, காலை 6:00 மணி, 10:00, பகல் 1:00, இரவு 7:00, 10:00, 10ம் தேதி காலை 5:30 மணி என ஆறு காலங்களில், ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால், விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ராஜேஷ், எஸ்.பி., விஜயகுமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். தரிசனம் காண வரும் பெண்களுக்கு தனி இடம் ஒதுக்குதல், அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுதல், வி.ஐ.பி.,க்களை உள்ளே அனுமதிக்கும் வழிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அன்னதானம் நடைபெறும் இடங்களில் குவியும் குப்பைகளை உடனடியாக அகற்றவும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், அன்னதானம் வழங்குவோர் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்துவதை கண்காணித்து தடை செய்யவும் உத்தரவிட்டனர். தைப்பூச பாதுகாப்பு பணிக்கு எஸ்.பி., தலைமையில் இரு கூடுதல் எஸ்.பி.,க்கள், 6 டி.எஸ்.பி.,க்கள் உட்பட 1,200 போலீசார் மற்றும் 300 ஊர்க்காவல் படையினர் ஈடுபட உள்ளனர்.