பதிவு செய்த நாள்
06
பிப்
2017
01:02
மதுரமங்கலம்: மதுரமங்கலத்தில், அவதரித்த ஸ்ரீஎம்பாருக்கு திருமஞ்சனம் செய்யப்படும் தீர்த்தம் கண் நோய்களை தீர்க்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது. இதனால், திருமஞ்சனம் நடைபெறும் நாட்களில் அதிக அளவு பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மதுரமங்கலத்தில், ஸ்ரீவைகுண்ட பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீராமானுஜரின் சிற்றன்னையின் மகன், ஸ்ரீஎம்பார் அவதரித்து வழிபட்ட தலம். இந்த கோவிலில் ஸ்ரீ எம்பார் திருமேனியில் செய்யப்படும் திருமஞ்சன தீர்த்தம், கண் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மாதந்தோறும் புனர்பூசம் நட்சத்திரத்தன்று ஸ்ரீ எம்பாருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. அப்போது, பசும்பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் கொண்டு திருமஞ்சனம் செய்து முடிக்கப்பட்ட பின், எம்பார்ருக்கு அணிவிக்கப்பட்ட ஆடையை பிழிந்து, கிடைக்கும் தீர்த்தம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தை பருகுவதால், கண் குறைபாடுகள் மற்றும் கண் சார்ந்த அனைத்து நோய்களும் குணமடைவதாக நம்பப்படுகிறது. இதனால், எம்பாருக்கு திருமஞ்சனம் நடைபெறும் போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு பயனடைகின்றனர். தற்போது இந்த கோவிலில், ஸ்ரீஎம்பார் சுவாமியின் அவதார உற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு இன்று மாலை, 6:00 மணிக்கும், செவ்வாய் கிழமை மதியம், 1:00 மணிக்கும் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.