பதிவு செய்த நாள்
06
பிப்
2017
01:02
கொளத்துார்: கொளத்துார், கல்யாண ரங்கநாதப் பெருமாள் கோவிலில், 90 ஆண்டுகளுக்கு பின், மலர் யாக வைபவம், வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் அடுத்த கொளத்துார் கிராமத்தில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த, நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும், கல்யாண ரங்கநாதப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 2015ம் ஆண்டில், ராஜ கோபுரம் அமைக்கப்பட்டுக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, விசேஷத் திருமஞ்சனத்துடன் தினசரிப் பூஜைகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், நேற்று, 90 ஆண்டுகளுக்கு பின், இக்கிராமத்தைச் சேர்ந்த பட்டாச்சாரியார்கள் ஒருங்கிணைந்து, சுவாமிக்கு மலர் யாக வைபவத்தை நடத்தினர். இதில், ரோஜா, தவனம், செம்பருத்தி, துளசி உள்ளிட்ட ஒன்பது விதமான மலர்களைக் கொண்டு, ரங்கநாதப் பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி மற்றும் ரங்கநாயகித் தாயார் ஆகியோருக்கு மலர்களால் யாகம் செய்ததோடு, சகஸ்ரநாம அர்ச்சனைகளும் தீபாராதனைகளும் செய்யப்பட்டன. இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.