பதிவு செய்த நாள்
07
பிப்
2017
11:02
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் நேற்று, கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த, 50 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் நடந்தன. நேற்று, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, 12ம் கால யாக பூஜை நடந்தது. 7:15 மணிக்கு, கலச புறப்பாடு நடந்தது. காலை, 9:25 மணிக்கு, ராஜகோபுரம் உள்ளிட்ட, ஒன்பது கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.காலை, 10:05 மணிக்கு, அபிதகுஜலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என, கோஷம் எழுப்பி வழிபட்டனர். மாலை, 4:30 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு மஹா அபிஷேகம், இரவு, 8:00 மணிக்கு திருக்கல்யாணம், தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடந்தது.
சமயபுரம் : பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில், 2004ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பின், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்தன. 1ம் தேதி கும்பாபிஷேக விழா துவங்கி, 3ம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடந்தன.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன், 6ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை, 6:00 மணிக்கு, புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடந்தது. காலை, 7:10 மணிக்கு மாரியம்மன் கோவில் தங்க விமானம், மேற்கு கோபுரம், வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்கள், பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.திரண்டிருந்த பக்தர்கள், பராசக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது, ஸ்பிரிங்க்ளர்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.மாலை, 4:00 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. - நமது நிருபர் குழு -