நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில், புதிய கொடிமர பிரதிஷ்டை சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த கோயிலில் திருப்பணிகள் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக 15 லட்சம் ரூபாய் செலவில் புதிய கொடிமரம் நிறுவப்படுகிறது. இதற்காக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து தேக்கு மரம் கொண்டுவரப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூலிகை எண்ணெய்யில் பதப்படுத்தப்பட்டு வந்தது. நேற்று காலை இந்த கொடிமர பிரதிஷ்டை நடந்தது. அம்மனுக்கு நடந்த சிறப்பு பூஜைகளுக்கு பின், புதிய கொடிமரம் நிறுவப்பட்டது. இனி இதில் செம்பு தகடுகள் வேயும் பணி நடைபெறும். வரும் மாசி மாத கொடை விழாவுக்கு முன்னர் பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.