பதிவு செய்த நாள்
08
பிப்
2017
02:02
மீஞ்சூர்: மேலுார் திருவுடையம்மன் கோவிலில், 34 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், திருப்பணி மேற்கொள்ள போதிய பணம் இல்லாததால், பணிகளில் தொய்வு ஏற்பட்டு, தமிழக அரசின் நிதியுதவியை எதிர்பார்த்து நிர்வாகம் காத்திருக்கிறது. மீஞ்சூர் அடுத்த, மேலுார் கிராமத்தில், திருவுடையம்மன் சமேத திருமணங்கீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், தமிழ்நாடு சுற்றுலா துறையின் நவசக்தி கோவில்களில் ஒன்றாக இருக்கிறது. பவுர்ணமி நாட்களில், இக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெள்ளிக்கிழமைகளில் வரும் பவுர்ணமி, மிகவும் விசேஷமானது என, கருதப்படுகிறது.
ஆகம விதிப்படி, பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால், 1983க்கு பின், அதாவது, 34 ஆண்டுகளாக, கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருப்பது, பக்தர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடந்த ஆண்டு, திருவுடையம்மன் சேவா சபா என்ற பெயரில் துவங்கப்பட்ட அறக்கட்டளை மூலம், உபயதாரர்களின் உதவியுடன், கோவிலில் திருப்பணிகள் துவங்கப்பட்டன. அரசு நிதியாக, 30 லட்சம் ரூபாய் கிடைத்தது. ஆனால், கோவில் நிர்வாகம் அந்த தொகையை பயன்படுத்தாமல் வீணடித்ததால், அந்த தொகை, அரசின் கருவூலத்துக்கே மீண்டும் சென்றுவிட்டது. இதையடுத்து, உபயதாரர்களின் உதவியுடன், திருவுடையம்மன், திருமணங்கீஸ்வரர் சன்னிதிகளின் துாண்கள் மற்றும் உள்பிரகாக சுவர்களில் இருந்த வண்ணப்பூச்சுகள் சுத்தப்படுத்தும் பணிகள், முற்றிலும் முடிந்துள்ளன. இரண்டு சன்னிதிகளின் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு, அவை வர்ணம் தீட்டும் பணிகளுக்கு காத்திருக்கின்றன.
துாண்களில் கண்ணப்ப நாயனார், தபசு காமாட்சி, பிச்சாண்டவர் உள்ளிட்ட பல்வேறு வகையான சிற்பங்களும், உள்பிரகார சுவர்களில் கல்வெட்டுகளும் இருப்பது தெளிவாக தெரிகிறது. கல்வெட்டுகள் மூலம், 1,000 ஆண்டுகளுக்கு முன், இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது. தொல்லியல் துறையினர் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, அத்துறையினரின் அறிவுறுத்தலின்படி, கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடக்கின்றன.திருப்பணிகள் முற்றிலும் முடிந்து, வரும் மே, 17ல் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், நிதி ஆதாரம் இல்லாமல், பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. கோபுரங்கள் வர்ணம் பூசுதல், நுழைவாயில் கதவுகள் புதுப்பித்தல், சுற்றுச்சுவர் அமைத்துல், வெளி பிரகாரம் முழுவதும் கற்கள் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் காத்து கிடக்கின்றன. திட்டமிட்ட தேதியில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, அரசு நிதி உதவிக்காக, கோவில் நிர்வாகம் காத்திருக்கிறது. தற்போது, உபயதாரர்கள் உதவியுடன் திருப்பணிகள் நடந்து வருகின்றன. அரசு திரும்ப பெற்ற பணத்தை இந்த நிதியாண்டில் பெற்று, கோவிலில் துாண்கள், சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.
இந்து அறநிலைய துறை அதிகாரி: கடந்த, 2014ல், கோவில் திருப்பணிகளுக்காக, தமிழக அரசு, 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த நிதியை கொண்டு, இந்துசமய அறநிலையத் துறையினர் திட்டப் பணிகளை மேற்கொள்ள தவறியதால், ஓராண்டுக்கு பின், பணம் திரும்ப பெறப்பட்டது. தற்போது, மீண்டும் அரசின் உதவியை கோரியுள்ளோம்; தனியாரிடமும் நிதி ஆதாரம் கேட்டு வருகிறோம். திட்டமிட்டபடி, மே, 17ல் கும்பாபிஷேகம் நடக்கும். சத்தியதாஸ், திருவுடையம்மன் சேவா சபா செயலர்