பதிவு செய்த நாள்
09
பிப்
2017
11:02
பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. பழநி தைப்பூச விழா பெரிய நாயகி அம்மன் கோயிலில் பிப்.,3ல் துவங்கி பிப்.,12 வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருக்கல்யாணம் நடந்தது. மேற்குவெளி பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட மணப்பந்தலில் சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். விநாயகர் பூஜையுடன், கும்ப கலச பூஜைகள் நடந்தன. இரவு 8:15 மணிக்கு மாங்கல்ய தாரணம், மாலை மாற்றுதலுடன் திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் முத்துகுமாரசுவாமி அருள்பாலித்தார். இரவு 9:30 மணிக்குமேல் வெள்ளி ரதத்தில் உலா வந்தார்.
இன்று தேரோட்டம்: மலைக்கோயிலில் இன்று அதிகாலை 4:௦௦ மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பெரியநாயகி அம்மன் கோயிலின் நான்கு ரதவீதிகளிலும் மாலை 4:30 மணிக்குமேல் தைப்பூச தேரோட்டம் நடக்கும். காவடி, பால்குடங்களுடன் ஏராளமான பக்தர்கள் பழநிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.