பதிவு செய்த நாள்
09
பிப்
2017
12:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று வருஷாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி, அம்மனை தரிசித்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 2016 ஜன.,20ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதனைதொடர்ந்து நேற்று வருஷாபிஷேகம் நடந்தது. இதற்காக நேற்று முன்தினம் திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் 4 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசால பூஜைகள் துவங்கியது. நேற்று 2ம் கால பூஜை முடிந்ததும் கடம் புறப்பாடு நடந்தது. புனித நீர் கலசங்கள் கோயிலை அடைந்ததும் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் ஆகியோருக்கு புனித நீரால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், தக்கார் குமரன் சேதுபதி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், கோயில் அதிகாரிகள் ராஜாங்கம், கக்காரின், அண்ணாதுரை, கமலநாதன் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.