பதிவு செய்த நாள்
10
பிப்
2017
12:02
பழநி: தைப்பூசத்தை முன்னிட்டு பழநி மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் ஏழுமணி நேரம் காத்திருந்தனர். பாதயாத்திரைக்கு உலகப்புகழ் பெற்ற பழநி தைப்பூச திருநாளை முன்னிட்டு மலைக்கோயில் சன்னதி அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்றுமுன்தினம் இரவே பல்வேறு மாவட்டங்களில் இருந்து்வந்திருந்த பக்தர்கள் அடிவாரம் பகுதிகளில் குவிந்தனர். பழநி அடிவாரம், கோயில் தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள் அனைத்தும் நிரம்பிருந்தன. சன்னதிவீதி, பாதவிநாயகர் கோயில் கிரிவீதிகளில், மஞ்சள், காவி, பச்சை ஆடைதரித்த பக்தர்கள் அதிகாலை மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர். பால், மயில், இளநீர் காவடிகளுடனும், கரும்பு காவடிகளுடனும், முகத்தில் வேல் அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தும் கிரிவலம் வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மலைகோயிலுக்கு செல்ல பக்தர்கள் சன்னதிவீதி, பாதவிநாயகர்கோயில், கும்பாபிஷேக நினைவரங்கம் வழியாக சென்றனர். யானைப்பாதையில் 10க்கு மேற்பட்ட தடுப்புகளில் 1மணிநேரத்திற்கு மேல் பக்தர்களை நிற்க வைத்து படிப்படியாக மலைக்கோயிலுக்கு போலீசார் அனுப்பியதால் 7 மணி நேரம் காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். மலைக்கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள், கோயில் வளாகத்தில் ஓய்வு எடுக்க தடைவிதிக்கப்பட்டது. கிரிவீதியில் நீண்ட வரிசையில் 3 மணிநேரம் வரை பக்தர்கள் காத்திருந்து வின்ச்-கள், ரோப்கார் மூலம் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றனர்.