பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு பழநியில் குவியும் பக்தர்கள் இடும்பன்மலை பாறை உச்சியில் ஏறுவதால் விபத்து அபாயம் உள்ளது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி ஞானதண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பல்வேறு மாவட்ட பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவ்வாறு வருவோர் முதலில் இடும்பனை வணங்கிவிட்டு அதன்பின் மலைக்கோயிலுக்கு முருகனை வணங்க செல்வர். அவ்வாறு வரும் பக்தர்களில் சிலர் இடும்பன் மலை உச்சிவரை சென்று ஆபத்தான முறையில் பாறைமீது நின்று அலைபேசியில் புகைப்படங்கள், ‘செல்பி’ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த சிலநாட்களாக தைப்பூசவிழாவிற்கு வரும் பக்தர்கள் பாறைகளின் உச்சியில் ஏறி சூடம் ஏற்றி சூரியனை வழிபடுகின்றனர். இதனால் விபத்துஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் பழநிகோயில் நிர்வாகம் இடும்பன் மலைப் பாறைகளில் ஏறும் பக்தர்களை கண்காணிப்பதுடன், பாதுகாப்பை பலப்படுத்த வரவேண்டும். பாறைகளில் ஏறிவிளையாடும் பக்தர்கள், இளைஞர்களை விரட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.