துாத்துக்குடி, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூசத் தேரோட்டம் நடந்தது. கழுகாச்சலமூர்த்தி கோயில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 10ஆம் திருநாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் பூஜை மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, காலை 6 மணிக்கு சுவாமி சட்ட ரதத்தில் எழுந்தருளினார். கோ ரதத்தில் விநாயகப்பெருமாள் எழுந்தருளினார். அதன் பின்பு காலை 11 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. கோயில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். விநாயகர் ரதம் முன் செல்ல, தேர் தெற்கு ரத வீதி, பஸ் நிலைய சாலை, கோயில் மேல வாசல் தெரு, அரண்மனை வாசல் தெரு, கீழபஜார் வழியாக நிலையை அடைந்தது. இரவு 8 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.