கிருஷ்ணகிரி: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில், முருகன் திருவீதி உலா வந்தார். தேர், முருகன் கோவிலில் இருந்து, சென்னை சாலை வழியாக கிருஷ்ணகிரி ரவுண்டானா வந்து அங்கிருந்து, காந்தி ரோட்டில் உள்ள பெருமாள் கோவில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், தேர் மீது மிளகு கலந்த உப்பை தூவி வேண்டுதல் நிறைவேற்றினர். வீதி உலாவில், தேர் முன்புறம் கரகாட்ட நிகழ்ச்சி நடந்தது.