பதிவு செய்த நாள்
22
அக்
2011
05:10
செங்கன்னூர்: கேரளா, ஆலப்புழா மாவட்டம் செங்கன்னூர் அடுத்த மூதவழி குமாரமங்கலத்தில், சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் பல்லாயிரம் ஆண்டு பழமையானது. கோவிலின் சன்னிதி இரு நிலைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேற்கூரை மீது, ஒரேயொரு கலசம் இருந்தது. இக்கலசம், 1,500 ஆண்டுகளுக்கு முந்தையது என கூறப் படுகிறது. இக்கலசத்தின் முகப்புப் பகுதி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் என்ற உலோகத்தால் வேயப்பட்டது என்ற செய்தி, பொதுமக்களிடமும், பக்தர்களிடமும் நிலவி வந்தது.இக்கலசம் குறித்து கேள்விப்பட்ட வெளி நாட்டைச் சேர்ந்த சிலர், அக்கலசத்தை சொந்தமாக்க, பல்வேறு வழிகளில் முயன்றனர். ஆனால், முடியவில்லை. இக்கோவிலுக்கு ஓராண்டுக்கு முன், இந்திய விண்வெளி ஆய்வுக் கழக விஞ்ஞானிகள் என்ற போலியான பெயரில் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர், கலசம் குறித்து விசாரித்துள்ளனர். அவர்களை பொதுமக்கள் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்த நிகழ்வும் நடந்துள்ளது. இதையடுத்து, கோவில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு, கோவிலின் அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வந்தன. இக்கோவிலில் அதிகாலை, வழக்கம் போல் பூஜை செய்வதற்காக வந்த மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்), கலசம் உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கோவில் மற்றும் அதைச் சுற்றி உள்ள இடங்களில் தேடுதல் வேட்டை நடந்தது. கீழே கிடந்த கலசத்தின் சில பகுதிகளை மோப்பம் பிடித்த நாய், அருகே உள்ள வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று இங்கும் அங்கும் சுற்றி வந்தது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. போலீசார், கோவிலில் பல இடங்களிலும் வேறு ஏதாவது கொள்ளை போய் உள்ளதா என பார்த்தனர். அப்போது கோவிலின் பின்புறம் ஏணி வைத்து மேற்கூரையில் ஏறி கலசத்தை உடைத்து கொள்ளை அடித்திருக்கலாம் என தெரியவந்தது. கலசத்தை கொள்ளையடிக்க, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு நபர் முயற்சிப்பது குறித்து, ஏற்கனவே செங்கன்னூர் குற்றப்பிரிவு போலீசார், கோவில் நிர்வாகத்திற்குமுன்னெச்சரிக்கை அளித்திருந்தனர். இருப்பினும், கொள்ளை நடந்துள்ளது.