செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருத்தேர் உற்சவத்திற்காக தேர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவி லின் பிரசித்தி பெற்ற மாசி திருத்தேர் விழா, இந்த மாதம் 24ம் தேதி மகா சிவராத்திரியன்று இரவு 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அன்று காலை கோபால விநாயகருக்கு பூஜையும், இரவு 10 மணிக்கு சக்தி கரக ஊர்வலமும் நடக்க உள்ளது. மறுநாள் (25ம் தேதி) காலை 11:00 மணிக்கு மயானகொள்ளை நிகழ்ச்சியும், 26 மற்றும் 27ம் தேதியன்று தங்க நிற மரபல்லக்கில் அம்மன் ஊர்வலமும், 28ம் தேதி மாலை 4:45 மணிக்கு தீமிதி விழாவும், மார்ச் 1 ம் தேதி தங்க நிற மர பல்லக்கில் ஊர்வலமும் நடக்கிறது. முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் 2ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடக்க உள்ளது. மேல்மலையனுார் ஐதீகத்தின் படி திருத்தேர் உற்சவத்திற்காக பச்சை மரங்களை கொண்டு 49 அடி உயரத்தில் புதிதாக தேர் கட்டும் பணி கடந்த 9ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தேரின் சக்கரம், அம்மன் பீடம் , கலசம் ஆகியன நிலையாக செய்து வைத்துள்ள னர். தேரின் மற்ற பாகங்களை பனை, கட்டுவா, புளியன் மரங்களை கொண்டு 50க்கும் மேற்பட்ட மர வேலை செய்யும் தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை மற்றும் அறங்காவலர்கள் மேற்பார்வை யில் செய்து வருகின்றனர்.