பதிவு செய்த நாள்
20
பிப்
2017
12:02
கோவை: கோவை கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் முதல் தேதி நடக்கிறது. கோவையின் காவல் தெய்வமாக விளங்கும், கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்தாண்டு தேர் திருவிழா, 14ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. வரும் 21ம் தேதி கொடியேற்றம் மற்றும் அக்னிசட்டி ஏந்துதல் நடக்கிறது. பிப்., 24ம் தேதி திருவிளக்கு பூஜை நடக்க உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம், வரும் 28 ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, மார்ச் 1ம் தேதி தேர்த்திருவிழா நடக்க உள்ளது. இந்தாண்டு கோனியம்மன் கோவிலுக்கு, 21.5 லட்சம் ரூபாயில், புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த, 13ம் தேதி புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. திருவிழா நாட்களில், தினமும் அம்மன் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். திருவிழா நாட்களில் பல்வேறு சிறப்பு ஆராதனைகளும் நடக்க உள்ளன.