பதிவு செய்த நாள்
20
பிப்
2017
12:02
சின்னாளபட்டி;சின்னாளபட்டி கீழக்கோட்டை கோட்டைமந்தை பகுதியினர் சார்பில் சந்துமாரியம்மன் திருவிழா நடந்தது.சின்னாளபட்டியில் நோய் தாக்குதல் எதிரொலியாக, பாரம்பரியமாக சந்து மாரியம்மன் கோயில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. 60 ஆண்டுகளுக்கு மேலாக, தெருக்கள் தோறும் தனித்தனியே மாரியம்மன் கரகம் பாலித்தலுடன் வழிபாடு நடத்துவதை வழக்கமாகக்கொண்டுள்ளனர். டிச. 31ல், அண்ணா நகர், கலைஞர் காலனி, பாரதிநகர், சோமசுந்தரம் காலனி, தென்புதுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 70க்கும் மேற்பட்ட தெருக்களில் விழா நடந்தது.
பிப்.14ல் கீழக்கோட்டை, கோட்டைமந்தை, வடக்குத்தெரு, நாடார்தெரு உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த மக்கள், தெரு வாரியாக சந்து மாரியம்மன் திருவிழா கொண்டாடினர். முளைப்பாரியுடன் மெயின்ரோட்டில் உள்ள பிருந்தாவன தோப்பிற்கு சென்று கும்மி அடித்தனர். பல்வேறு வகை பூக்களைக்கொண்டு, தனித்தனியே அம்மன் கரகம் பாலித்தல் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகம், முளைப்பாரியுடன் அழகர் கோயிலை வலம் வந்து ஊர்வலம் புறப்பட்டனர். தெருக்களில், ஊர்வல பாதை முழுவதும் மா, வேப்பிலை தோரணங்களுடன், கரகத்திற்கு அபிஷேகம் தொடர்ந்தது. அம்மன் கொலுவிற்காக ஓலை பந்தல், கரும்பு பந்தல் அமைக்கப்பட்டிருந்தன. சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.