பதிவு செய்த நாள்
27
அக்
2011
10:10
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுடன் துவங்கியது. காலையில் யாகசாலை பூஜைகள் முடிந்து, திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு காப்பு கட்டிய பின், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. காப்பு கட்டிக் கொண்ட பக்தர்கள், கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்கின்றனர்.
மதுரை சுற்றிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டினர். விழா முக்கிய நிகழ்வாக அக்., 30ல் வேல் வாங்குதல், அக்., 31ல் சூரசம்ஹாரம், நவ., 1 காலையில் சட்டத் தேரோட்டம், மாலை 4 மணிக்கு, மூலவருக்கு தைல காப்பு சாத்துப்படியாகி, பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும். விழா நாட்களில் தினம் காலை 8.30, மாலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜைகளும், காலை 11 மணிக்கு சண்முகார்ச்சனையும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி, தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் வந்து அருள்பாலிப்பார்.