திருநெல்வேலி : நெல்லை பகுதி முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா 26ம்தேதி துவங்கியது. நெல்லையில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடக்கும். கந்தசஷ்டியை முன்னிட்டு பக்தர்கள் விரதம் அனுஷ்டிப்பர். திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா துவங்கியது. 31ம்தேதி வரை தினமும் காலை, மாலையில் யாகசாலை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 31ம்தேதி மாலை 4 மணிக்கு சுப்பிரமணியர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. நவம்பர் 1ம்தேதி மதியம் 11 மணிக்கு சி.என். கிராமத்தில் தபசுக்காட்சி, இரவு 7 மணிக்கு கோவிலில் திருக்கல்யாண விழா நடக்கிறது. தொடர்ந்து நவம்பர் 2, 3, 4 தேதிகளில் ஊஞ்சல் கட்டளை, 5ம்தேதி தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர், கட்டளைதாரர்கள், பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.