பதிவு செய்த நாள்
24
பிப்
2017
12:02
கடலுார்: சுவாமி சிலையை கடத்தி வந்த கும்பலை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பிடித்தனர். கோவிலில் இருந்து திருடப்பட்ட சுவாமி சிலை, கடலுாரில் கைமாறுகிறது என்ற ரகசிய தகவலையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், கடந்த சில தினங்களாக, கடலுாரில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வந்தனர். கடலுார் தலைமை தபால் நிலையம் அருகே, இரண்டு கார்களில் வந்த ஐந்து பேரை, போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். தப்பியோட முயன்றவர்களை, போலீசார் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. பிடிபட்ட, ஐந்து பேரையும், கடலுார் முதுநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தினர். விசாரணையில், 23 – 44 வயதுடைய அவர்கள், மயிலாடுதுறை கோவிலில் இருந்து, 1.5 அடி உயரமுள்ள, 25 கிலோ எடையுள்ள, 4 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் விநாயகர் சிலையை, கடத்தி வந்தது தெரிய வந்தது. இந்த சிலையை, புதுச்சேரியில் உள்ள முக்கிய பிரமுகர் விலைக்கு வாங்கி, அங்கிருந்து கடல் வழியாக வெளிநாட்டிற்கு கடத்திச் செல்ல இருந்தது தெரிய வந்தது. கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, ஐந்து பேரையும் கைது செய்து, கடலுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.