பதிவு செய்த நாள்
27
பிப்
2017
12:02
பாகூர்: பாகூரில் கட்டுமான பணிக்கான அஸ்திவாரம் தோண்டியபோது, பழமை வாய்ந்த சாமி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகூரை சேர்ந்தவர் தில்லைவாணன். ஆசிரியர். பாகூர் அக்ரஹார வீதியில், இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுமான பணி மேற்கொள்ள ஜெ.சி.பி., மூலம் பள்ளம் தோண்டும் போது, சுமார் 6 அடி ஆழத்தில் கருங்கல் ஒன்று தென்பட்டுள்ளது. பள்ளம் தோண்டும் பணியை நிறுத்தி விட்டு, அந்த கல்லின் மீது இருந்த மண் குவியலை சுத்தம் செய்து பார்த்தபோது, சாமி சிலை என்பது தெரிய வந்தது. சாமி சிலை கிடைத்திருப்பது குறித்து அப்பகுதியில் செய்தி பரவியதால், ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இதனிடையே, இது குறித்து தகவலறிந்த பாகூர் தாசில்தார் கார்த்திகேயன், சம்பவ இடத்திற்கு சென்று, மண்ணில் புதைந்து கிடந்த சிலையை ஆய்வு செய்தார். அதில், அந்த சிலை ஆறரை அடி நீளமும் சிலையின் தலைப்பகுதியில் உள்ள கிரீடத்தின் வடிவமைப்பு வைணவ கடவுளுக்கு இருப்பது போல் அமைந்துள்ளது. சிலை குறித்து முழுமையான தகவல்கள் தெரியவில்லை.
இது குறித்து தாசில்தார் கார்த்திகேயன் கூறுகையில் சிலையின் வடிவமைப்பை வைத்து பார்க்கையில் அது பெருமாள் சிலையாக இருக்கலாம். மேற்கொண்டு அந்த இடத்தில் பள்ளம் தோண்டினால், சிலை சேதமாக வாய்ப்புள்ளது என்பதால், பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த சிலையுடன் வேறு சில சிலைகளும் இருக்க வாய்ப்புள்ளதால், அதனை வெளியில் எடுப்பதில் சிக்கல் உள்ளது. இது குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் கிழமை தொல்லியல் துறை அதிகாரிகள், புதைந்து கிடக்கும் சிலையை வெளியில் எடுத்து ஆய்வு பணியில் ஈடுபடுவர் என எதிர்பார்கிறோம் என்றார்.
தொல்லியல் துறை களம் இறங்குமா?
கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் வயல் பகுதியை சீரமைக்கும் பணியின் போது, 5 அடி உயரம் உள்ள சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதுவரை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபடவில்லை. இந்நிலையில், பாகூரில் கண்டுபிடிக்கப்பட்ட சாமி சிலை குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் எப்போது ஆய்வு பணியை மேற்கொள்வார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.