திருப்புத்துார், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் இன்று (மார்ச் 2) மாலை மாசி தெப்ப உற்சவம் துவங்குகிறது. திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்சவம் 11 நாட்கள் நடைபெறும். இன்று இரவு 7:10 மணிக்கு மேல் கடக லக்னத்தில் ம்ருத்ஸங்கரஹணம், சேனை முதல்வர் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து மார்ச் 3ல் உற்சவம் துவங்கும். காலை 7:10 மணிக்கு மேல் பெருமாள் கல்யாண மண்டபம் எழுந்தருளலும், இரவில் திருவீதி புறப்பாடும் நடைபெறும். தொடர்ந்து காலை திருவீதி புறப்பாடும், இரவில் பல்வேறு வாகனங்களில் திருவீதி புறப்பாடு நடைபெறும். மார்ச் 11ல் வெண்ணெய்தாழி சேவையில் திருவீதி புறப்பாடு,மார்ச் 12:00 காலை பகல் தெப்பம், இரவு 10:00 மணிக்கு இரவு தெப்பம் நடைபெறும். மறுநாள் காலை தீர்த்தவாரியுடன் தெப்ப உற்சவம் நிறைவடையும். இந்த உற்சவத்தில் தெப்பக்குளக்கரையில் வேண்டுதலை பிரார்த்திக்கவும், நிறைவேறிய பிரார்த்தனைக்குபெண்கள் தீபமேற்றி வழிபடுவது சிறப்பானது.ஏற்பாட்டினை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தினர் செய்கின்றனர்.