காஞ்சிபுரம்: மாகறலீஸ்வரர் கோவில் மாசி மகம் திருவிழா, கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. வரும் திங்கள் கிழமை திருக்கல்யாண உற்சவமும், புதன் கிழமை தேர் திருவிழாவும் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் அடுத்த மாகறல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள, புவனநாயகி உடனுறை மாகறலீஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் மாசி மாதம், மாசி மகம் உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் நடக்கும் இந்த உற்சவம், இன்று காலை, 4:30 முதல், 6:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சைவ குறவர்களில் ஒருவரான திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற திருத்தலம் இது. விழாவில், தினமும் காலை, இரவில் சுவாமி புறப்பாடு நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், திங்கள் கிழமை இரவு நடைபெறுகிறது. புதன் கிழமை மாலை, 5:00 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெறுகிறது. வரும், 10ம் தேதி நடராஜர் சேர்வை தீர்த்தவாரியுடன் இந்த உற்சவம் நிறைவு பெறுகிறது.