பதிவு செய்த நாள்
04
மார்
2017
12:03
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழாவில், மத்திய அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, சதானந்த கவுடா பங்கேற்றார். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளார், 77வது பிறந்த நாள் விழா, 28ம் தேதி, கலச விளக்கு பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம், 1,150 பக்தர்களுக்கு, இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கல இசையுடன் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை, 8:30 மணிக்கு, வீட்டில் பெற்றோர் படங்களுக்கு, தீபாராதனை காட்டி அடிகளார் வணங்கினார். அதன் பின், மலர் அலங்கார ரதத்தில், அவரை பக்தர்கள் அழைத்து வந்தனர். அதில், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத்தலைவர்கள், அன்பழகன், செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ், சேலம் தொழில் அதிபர் உமாதேவி ஆகியோர் வந்தனர். காலை, 9:00 மணிக்கு, சித்தர் பீடம் வந்த அடிகளார், ஆதிபராசக்தி அம்மனை வணங்கினார்.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, தமிழ்நாடு தேர்வாணையத் தலைவர் அருண்மொழி, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் ஆகியோர் ஆசி பெற்றனர். ஆதிபராசக்தி விளையாட்டு திடலில், அதிகாலை, 3:00 மணிக்கு, பக்தர்கள் குவிந்தனர். அதன் பின், நீண்ட வரிசையில் வந்த பக்தர்களை, காலை, 9:10 மணிக்கு, கோவிலுக்குள் அனுமதித்தனர். காலையில், துவங்கிய பக்தர்கள் கூட்டம், இரவு வரை நீடித்தது. விழா ஏற்பாடுகளை, சேலம், நாமக்கல் மாவட்டங்களின் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் செய்திருந்தன.