பதிவு செய்த நாள்
04
மார்
2017
12:03
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், மூலவருக்கு நடக்கும் பஞ்சாமிர்த அபிஷேகம் கட்டணம், 1,000 ரூபாயில் இருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மூலவருக்கு பஞ்சாமிர்தம், பால், இளநீர், சந்தன காப்பு போன்ற அபிஷேகங்கள் மற்றும் தங்கக்கவசம் அணிவிப்பது போன்றவற்றை அதற்கான கட்டணம் செலுத்தி நிறைவேற்றுகின்றனர். இதுதவிர, உற்சவருக்கு கல்யாண உற்சவம், தங்கத்தேர், வெள்ளித்தேர், வெள்ளி மயில் வாகனம், கேடய உற்சவம் ஆகியவையும் அதற்கான காணிக்கை கட்டணம் செலுத்தி, பக்தர்கள் நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் முதல், பஞ்சாமிர்த அபிஷேகம் மட்டும், 1,000 ரூபாயில் இருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மீதமுள்ள அனைத்து அபிஷேகம் மற்றும் சேவைகள் பழைய கட்டணமே பக்தர்களிடம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த, 2013 ஜன., 27ல் தான் அனைத்து அபிஷேக கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அதன் பின், தற்போது பஞ்சாமிர்த அபிஷேகம் மட்டும் கட்டணம், 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, கோவில் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: மூலவருக்கு நடத்தப்படும் பஞ்சாமிர்தம் அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களான நாட்டு வெல்லம், கற்கண்டு, பேரீச்சம்பழம், வாழைப்பழம் மற்றும் எசன்ஸ் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பஞ்சாமிர்த கட்டணம், ௧,௦௦௦ ரூபாயில் இருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மீதமுள்ள அபிஷேகம், சேவைகள் பழைய கட்டணமே பக்தர்களிடம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் உயர்வுக்கு முறையாக இந்து அறநிலைய துறை ஆணையரிடம் அனுமதி பெற்று, அவரது ஒப்புதலுடன் தான் கட்டணம் உயர்த்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.