நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா நேற்று நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் நிறைவு பெற்றது. ஏராளமான மக்கள் விழாவில் பங்கேற்றனர்.குமரி மாவட்டத்தில் உள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். கேரள பெண்கள் இருமுடி கட்டு ஏந்தி வந்து கடலில் குளித்து தேவியை வழிபடுவதால் இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாசி மாதம் கடைசி செவ்வாய் அன்று நிறைவு பெறும் வகையில் பத்து நாள் திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான கொடை விழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் தேவி பல்லக்கில் எழுந்தருளல் நடைபெற்றது. ஒன்பதாம் நாள் விழாவில் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் நடைபெற்றது. தேர் போன்ற சக்கர வேண்டியில் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள வளையத்தில் 51 தீபங்கள் ஏற்றி அதன் நடுவில் விரதமிருந்த பக்தர்கள் நிற்பார். பக்தர்கள் தேவியை துதித்த படி அதை கோயிலை சுற்றி இழுத்து வருவர்.
சக்கர தீவட்டிக்கு பின்னால் அம்மன் வெள்ளிப்பல்லக்கு பவனி வரும்.நிறைவு நாளான நேற்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது. பல்வகை கூட்டு பதார்த்தங்களுடன் சோறு சமைக்கப்பட்டு அதை ஒன்பது மண் பானைகளில் வைத்து, அதை பூஜாரிகள் தலையில் சுமந்து வந்தனர். இந்த பானைகள் வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் நிலவும் நிசப்தம்தான் இந்த பூஜையின் சிறப்பாகும். கோயிலில் வந்ததும் இவை அம்மனுக்கு படைக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கொடை விழாவையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.