பதிவு செய்த நாள்
08
மார்
2017
11:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கோவிலில், பழமை வாய்ந்த பாளையக்காரர்கள் காலத்து நடுகற்கள் கண்டறியப்பட்டன. பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி பெருமாள் கோவிலில், பழங்கால சிற்பங்கள் உள்ளதாக தகவல் வந்தது. இதனையடுத்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம், தஞ்சை பல்கலையில் பயிலும் தொல்லியியல் ஆய்வு மாணவர் ரமேஷ், ஆச்சிப்பட்டியை சேர்ந்த நந்தகுமார் ஆகியோர் ஆச்சிப்பட்டிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
இது குறித்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் கூறியதாவது: கோவை- பொள்ளாச்சி ரோட்டில், அமைந்துள்ள ஆச்சிப்பட்டியில் 700 ஆண்டு பழமை வாய்ந்தது என கருதப்படும் கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. கோவிலின் பழமை ராமபட்டிணம் பாளையக்காரர்களின் காலத்துடன் இணைத்து பேசப்படுகிறது. இந்த கோவில் கருவறை கல் கட்டுமானத்துடன் உள்ளது. கல் கட்டுமானம் கூரைப்பகுதியுடன் நிறைவு பெற்றுள்ளது.
பழங்கால சிற்பங்கள்: முன்மண்டபத்தின் தென்புற சுவரையொட்டி இரண்டு பெரிய பலகை கற்களில் புடைப்பு சிற்பங்கள் உள்ளன. ஒன்றின் நடுவில் ஓர் ஆண் சிற்பமும், ஆணின் இருபுறமும் இரு பெண்களின் சிற்பங்களும் உள்ளன. இது ஒரு நடுகல் சிற்பம். ஆணின் உருவம், ஒரு தலைவனின் சிற்பம் என கருதுமாறு அமைந்துள்ளது. இரு பெண்களின் சிற்பங்களும் தலைவனின் இரு மனைவியார் என கருதுமாறு உள்ளன. இருவரின் தலைமுடியும் முடியப்பட்டு வலப்புறமாக கொண்டையிட்ட தோற்றத்தில் உள்ளன. பெண்ணின் இடது கை உயரத்துாக்கிய நிலையில் உள்ளது. கையில் உள்ள பொருள் இன்னதென்று புலப்படவில்லை. சிலைகளின் இடைப்பகுதியிலிருந்து கால்கள் வரையுள்ள பகுதி நிலத்தின் கீழ் புதைந்துள்ளது. நிலத்திலிருந்து முழுதாக தோண்டி வெளிக்கொணரும்போது சிற்பங்களும் முழு உருவங்களும் புலப்படும்.
நான்கு உருவங்கள்...: அருகில் உள்ள இன்னொரு பலகை கல்லில் நான்கு உருவங்கள் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை தலைப்பகுதி வர மட்டுமே வெளியில் தெரிகின்றன. மீதிப்பகுதி முழுதும் தரைக்கு கீழ் புதைந்துள்ளன. இரண்டு பலகைக்கற்களின் பெரிய அளவுள்ள தோற்றம், சிற்பங்களின் அமைப்பு, வேலைப்பாடுகள், சிற்ப நேர்த்தி ஆகியவை கொண்டு இந்த நினைவுக்கற்கள் பழமையானவை என்பதும், இவை பாளையக்காரர்கள் காலத்தை சேர்ந்தவை என தெரிகிறது. இதற்கு சான்றாக இக்கோவிலுக்கும் ராமபட்டிணம் பாளையக்கார்களுக்கும் உள்ள தொடர்பு அமைகிறது. ராமபட்டிணம் ஜமீன் வழியினர் தொன்றுதொட்டு வணங்கி வரும் கோவிலாக உள்ளது.
நினைவுக்கல் சிற்பங்கள்: கோவிலின் முன் மண்டபத்தில் அர்த்த மண்டபத்தின் நுழைவாசலுக்கு இடப்புறம், இரு கற்சிலைகள் காணப்படுகின்றன. உயர்நிலை தலைவர்களின் தோற்றத்தில் இச்சிலைகள் உள்ளன. இடைக்கச்சில் குறுவாளோடு காட்சி தரும் இருவரின் ஆடகைள் மடிப்புடன் பாதம் வரையில் உள்ளன. சிற்பங்களின் பீடப்பகுதியில் திம்மண கவுண்டர் என்றும், அமண கவுண்டர் என்றும் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் காணப்படுகின்றன. எழுத்துக்கள், பிற்கால எழுத்துக்களாக உள்ளன. எனவே, இந்த நினைவுக்கற்கள், இக்கோவிலுக்கு திருப்பணி செய்த ஜமீன் வழியினர் என கருதலாம். நாயக்கர் என பெயருடன் வந்த பாளையக்காரர் வழியினர் பின்னாளில் ஊர்த்தலைவர்களாய் மாற்றம் பெற்ற போது, அவர்களது பெயர்களிலும் மாற்றம் ஏற்பட்டது. ஊர்த்தலைவர்கள், கர்நாடகத்திலும், தமிழகத்திலும் காமுண்டர் என அழைக்கப்பட்டதாக இருமாநில கல்வெட்டுகளிலும் காணப்படும் செய்தியாகும்.
ராமபட்டிணம் பாளையம்: மதுரை விசுவநாத நாயக்கர் ஆட்சி காலத்தில், கோவை மாவட்டத்தில் ஊத்துக்குளி, சமத்துார், புரவிபாளையம், ஆவலப்பம்பட்டி, ஆச்சிப்பட்டி, நெகமம், மெட்ராத்தி, துங்காவி, மைவாடி என பல பாளையங்கள் இருந்துள்ளன. ஆச்சிப்பட்டி பாளையத்தார், சில காரணங்களால், பொள்ளாச்சி ராமப்பட்டிணத்துக்கு குடி பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆச்சிப்பட்டி பாளையத்தில் கோட்டையும், சிறைச்சாலையும் அமைந்திருந்தன என அறியப்படுகிறது. கோவை, பாலக்காடு ஆகிய மாவட்டங்களின் பல ஊர்கள் ராமபட்டணம் ஜமீனுக்கு கீழ் இருந்தன. இந்த ஜமீனை சேர்ந்தவர்கள், தம் வருவாயில் பல்வேறு கொடைகள் நல்கியுள்ளனர். கோவை காரனேஷன் பூங்கா உருவாவதற்கு துணை புரிந்துள்ளனர். குமர அம்மாள் எனும் ஜமீன்தாரிணி, பாலக்காடு சாலையில் மரங்கள் நட்டுவித்துள்ளார். ஆச்சிப்பட்டி கோட்டைப்பகுதியிலிருந்த பெருமாள் கோவில் ராமபட்டணத்து ஜமீன் குடியினர் வந்து வழிபடும் கோவிலாக அமைந்தது. இந்த ஜமீனின் இறுதி ஜமீன்தார் குமரகுருபர ராமநாத மலையாண்டி எர்ரப்பர் என்பவர் ஆவார். இவர் ராமபட்டணத்திலிருந்து கோவைக்கு குடி பெயர்ந்தார்.
ஆச்சிப்பட்டி பாளையக்காரர் வரலாற்றோடு தொடர்புடைய ஊர் என்பதும், இங்குள்ள பெருமாள் கோவில், பாளையக்காரர்கள் காலத்தில் உருவாகி அவர் தம் குடியினர் தொடர்ந்து வழிபடும் கோவிலாக உள்ளது என்பதும், இக்கோவிலில் பாளையக்காரர்கள் காலத்து நினைவுக்கல் சிற்பங்கள் வரலாற்று தடயங்களாக இன்னும் காணப்படுகின்றன என்பதும் அறியப்படுகின்றன. இந்த பெருமாள் கோவில், இன்றளவும் கோட்டை கோவில் எனும் பெயரால் அழைக்கப் பெறுவதனின்றும் ஆச்சிப்பட்டியில் கோட்டை இருந்துள்ளது புலப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.