பதிவு செய்த நாள்
09
மார்
2017
04:03
தஞ்சாவூர்: மாசிமகப் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலின் ஐந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகப் பெருவிழா மகாமக குளத்தில் நடைபெறுவதால் மகாமக நகரம் என்றும், பாஸ்கர சேத்திரம் என்றும் போற்றப்படுகிறது. இந்நகரில் மகாமக தொடர்புடையதாக 12 சிவன்கோயில்களும், 5 வைணவ தலங்களும் திகழ்கின்றன. சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் உலகிலேயே முதன்முதலாகத் தோன்றியதாக மங்களாம்பிகை உடனாய ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் திகழ்கிறது. இக்கோயிலை முதன்மையாக கொண்டே ஆண்டுதோறும் மாசிமாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தன்று நடைபெறும் மாசிமகப்பெருவிழாவும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப்பெருவிழாவும் நடைபெறுகிறது.
மாசிமகப்பெருவிழா கடந்த 2ம் தேதி பத்து நாள் உற்சவமாக கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் முக்கிய விழாவான தேரோட்டம் காலை ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. முதலில் அதிகாலை 5.30 மணிக்கு விநாயகர் தேரோட்டமும், அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிக்கைஅம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர்,விநயாகர் ஆகிய ஐந்து தேரோட்டமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர்.