பதிவு செய்த நாள்
13
மார்
2017
12:03
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அடுத்த, பூதிமுட்லு கிராமத்தில், கோதண்டராம சுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட, பூதிமுட்லு கிராமத்தில் உள்ள கோதண்டராம சுவாமி கோவில் திருவிழா, கடந்த, 6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 10ல் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து, நேற்று மதியம், 3:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து, கோவிலை சுற்றி இழுத்தனர். தேர்த்திருவிழாவை காண, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, சிகரமாகனப்பள்ளி, தோட்டகணமா, தாசிரிப்பள்ளி, கத்திரிப்பள்ளி, கோட்டூர், அரியனப்பள்ளி, வி.மாதேப்பள்ளி, நாடுவனப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்கள், பக்தர்களுக்கு அன்னதானம் செய்தனர். இன்று (மார்ச், 13) ஆஞ்சநேயர் தேர் பவனி நடக்க உள்ளது. இதையடுத்து, 14ல், இரவு பல்லக்கு உற்சவம் நடக்கிறது.