பதிவு செய்த நாள்
13
மார்
2017
12:03
ஓசூர்: ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை கவி நரசிம்மர் மற்றும் தேவன்தொட்டி பசுவேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், கவி நரசிம்மர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. விழாவையொட்டி, ராமபாணம் என்ற கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து, ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் சார்பில், பஜனை மற்றும் கீர்த்தனை நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று காலை, 10:00 மணிக்கு, தளி எம்.எல்.ஏ., பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் தேர் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேரில், உற்சவ மூர்த்தி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு, பக்த பிரகலாதா நாடகம் நடந்தது. விழாவில் இன்று (மார்ச்,13) இரவு, முத்து பல்லக்கு உற்சவம், வாண வேடிக்கை மற்றும் நல்லதங்காள் நாடகம் நடக்கிறது. இதேபோல், அஞ்செட்டி அடுத்த தேவன்தொட்டி கிராமத்தில், நேற்று காலை பசுவேஸ்வர சுவாமி கோவிலில், தேர்த்திருவிழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் வலம் வந்த உற்சவ மூர்த்தி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கர்நாடகா, தமிழக பக்தர்கள், 3,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.