பொன்னம்பல மேட்டில் கோயில் மத்திய அரசின் அனுமதி கிடைக்குமா தேவசம்போர்டு எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2017 12:03
சபரிமலை, மகரவிளக்கு நாளில் மகர ஜோதி காட்சி தரும் பொன்னம்பல மேட்டில் தர்மசாஸ்தா கோயில் கட்டுவதற்கான நடவடிக்கையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு துரிதப்படுத்தியுள்ளது. இதற்காக மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மகரவிளக்கு நாளில் சபரிமலை சன்னிதானத்தின் எதிர்புறம் உள்ள பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி காட்சி தரும். ஜோதி தரிசனத்துக்காக ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் கூடுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதி தினத்தில் புல்மேட்டில் நடைபெற்ற விபத்தில் 107 பக்தர்கள் இறந்தனர். இந்த சம்பவத்துக்கு பின்னர் மகர ஜோதி பற்றிய பல்வேறு விவாதங்களும் கிளம்பியது. இறுதியில் சபரிமலை மூத்த தந்திரி கண்டரரு மகேஸ்வரரு மகர ஜோதி ஏற்றப்படுவதுதான் என்றும், மகர நட்சத்திரம் தெரிவது இயற்கையானது என்றும் தெரிவித்தார். இதை தொடர்ந்து தற்போது பொன்னம்பலமேட்டில் தர்ம சாஸ்தா கோயில் கட்ட தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இந்த பகுதி பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்கு உட்பட பகுதியில் வருகிறது. எனவே கோயில் கட்டுவதற்காகவும், அங்கு செல்லும் பாதைக்காகவும் ஒரு ஏக்கர் வனபூமி கேட்டு தேவசம்போர்டு சார்பில் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: பொன்னம்பல மேட்டில் கட்டப்படும் கோயிலில் தினமும் பூஜை, வழிபாடு நடத்துவற்கு நினைக்கவில்லை. மகரவிளக்கு நாளில் மட்டும் பூஜைகள் நடைபெறும். அன்று பம்பை கணபதி கோயில் மேல்சாந்தி அங்கு சென்று பூஜைகள் நடத்துவார். ஜோதி ஏற்றும் பொறுப்பும் பம்பை மேல்சாந்தியிடம் ஒப்படைக்கப்படும். சபரிமலை தந்திரியின் அனுமதியுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு நாளில் மட்டும்தான் இங்கு செல்ல அனுமதி உண்டு. தேவசம்போர்டு நிர்வாகிகள் உட்பட எவரும் அங்கு செல்ல அனுமதி கிடையாது. வனபாதுகாப்பு சட்டத்தை கடுமையாக கடைபிடிப்போம் என்று தேவசம்போர்டு சார்பில் மத்திய அரசுக்கு உறுதி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.