பதிவு செய்த நாள்
18
மார்
2017
11:03
சங்ககிரி: சங்ககிரியில், ஊர் பொதுக்கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அர்த்தனாரீஸ்வரர் சிலையை, வருவாய் துறையினர் கருவூலத்தில் ஒப்படைத்தனர். சங்ககிரி பேரூராட்சியில், குடிநீர் பிரச்னையைத் தீர்க்க, ஊர் பொதுக்கிணறுகள் தூர்வாரும் பணி நடக்கிறது. அதன்படி, பழைய இடைப்பாடி சாலை, அல்லிமாரியம்மன் கோவில் முன் உள்ள ஊர் கிணற்றில், ஐந்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், நேற்று, தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒன்றரை அடி உயரமுள்ள அர்த்தனாரீஸ்வரர் சிலையை, கிணற்றில் இருந்து கண்டெடுத்தனர். அவர்கள், சின்னாக்கவுண்டனூர் வி.ஏ.ஓ., சித்தீஸ்பிரபுவுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடம் வந்த அவர், சங்ககிரி ஆர்.டி.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சிலையை சங்ககிரி கருவூலகத்தில், ஆர்.டி.ஓ., ஒப்படைத்தார். அது ஐம்பொன் சிலையா என, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்த பின் தான் தெரிய வரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.