பதிவு செய்த நாள்
28
மார்
2017
01:03
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அமாவாசை, பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் அதிகளவு பக்தர்கள் வருவர். மலைக்கோவிலில், அறநிலையத்துறை சார்பில், கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இங்கு, கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அளவுக்கு மேல், நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், மலைக்கோவில் அர்த்தமண்டப நுழைவு வாயிலில், காரில் இருந்து இறங்கி செல்வோர் தவிக்கின்றனர். மலைக்கோவில் பஸ் ஸ்டாண்ட் நுழைவுவாயிலில், இரண்டு சக்கர வாகனங்களை, பார்க்கிங் செய்து செல்வதால், நடந்து செல்லும் பக்தர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். ஒரு கடையில், விற்பனை செய்யும் பொருட்கள் வேறு கடையில் விற்பனை செய்யக்கூடாது.பிளாஸ்டிக் பொருட்கள், கோவில் அருகே விற்பனை செய்யக்கூடாது என, விதி உள்ள போதும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு, பொருட்களை விற்பனை செய்ய, மலைக்கோவில் போக்குவரத்து வழித்தடத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற, அறநிலையத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.