பதிவு செய்த நாள்
31
மார்
2017
02:03
துாத்துக்குடி, துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் திருப்புளிங்குடி காய்சினிவேந்தப்பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவத்திருவிழா நடந்தது. நவதிருப்பதிகளில் முன்றாவது திருப்பதியான திருப்புளிங்குடி காய்சினிவேந்தப்பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 21ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை மாலையில் பெருமாள திருவீதி உலாவும், ஜந்தாம் திருவிழா அன்று கருடசேவையும் நடந்தது.
9ம் திருவிழாவான நேற்று முன் தினம் காலை 8மணிக்கு பெருமாள் பல்லக்கில் மாடவீதி புறப்பாடும் 10மணிக்கு சந்நதியில் இருந்து தோளுக்கினியான் வாகனத்தில் தெப்பமண்டபத்தில் எழுந்தருளும், திருமஞ்சனமும், தீர்த்த விநியோக கோஷ்டியும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, இரவு 8.30மணிக்கு தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவியுடன்,காய்சினிவேந்தப்பெருமாள் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் கொண்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத்தொடர்ந்து, தீபாரதனை நடந்தது. விழாவில், தக்கார் விஸ்வநாத், நிர்வாக அதிகாரி கார்த்திக், ஆய்வாளர் ரவீந்திரன், ஸ்தலத்தார்கள் சீனிவாசன், ராஜப்பா வெங்கடாச்சாரி, கண்ணன், கிருஷ்ணன், மற்றும் பக்தர்கள் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.