பதிவு செய்த நாள்
01
ஏப்
2017
12:04
உடுமலை : தங்கள் கிராமத்துக்குரிய சலகெருதுவுக்கு உரிய மரியாதை செலுத்திய பின்னரே, கோவில் திருப்பணி உட்பட பணிகளை முன்னோர்கள் துவக்கியுள்ளனர் என்பதற்கு, 173 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு ஆதாரம் உடுமலை அருகே, வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், கால்நடைகளுக்கு அவர்கள் அளித்த முக்கியத்துவமும் வெளிப்படுகிறது. உடுமலை அருகேயுள்ளது வா.வேலுார் கிராமம். இங்கு, பழமை வாய்ந்த விநாயகர் கோவில் உள்ளது. வழக்கமாக கிராமங்களில், விநாயகர் கோவில்கள் அதிக கட்டுமானங்கள் இல்லாமல் எளிமையாக இருக்கும். ஆனால், வேலுாரில் உள்ள விநாயகர் கோவில், கருவறை, அர்த்தமண்டபம், சுற்றுச்சுவர், திருச்சுற்று, கருடகம்பம் என பிற கோவில்களை போல, பல்வேறு கட்டுமானங்களை கொண்டுள்ளது. மேலும், முன்புறமுள்ள கருட கம்பத்தில் கல்வெட்டும், கோவில் சுவற்றில் பல்வேறு உருவங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. இதனால், தங்கள் கிராம வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில், விநாயகர் கோவில் கல்வெட்டை படியெடுத்து, அதிலுள்ள தகவல்களை தெரியப்படுத்த வேண்டும் என அக்கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
கோவையை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் சுந்தரம் தலைமையிலான குழுவினர், வேலுார் விநாயகர் கோவிலில், ஆய்வு மேற்கொண்டனர். அதில், கோவில் முன்புறமுள்ள கருடகம்பத்தில், மேற்பகுதியில், பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகளை படியெடுத்தனர். அக்கல்வெட்டு, 173 ஆண்டுகளுக்கு முன்பு, காங்கல்ல குலத்தை சேர்ந்த வெங்கிடபதி நாயக்கர் என்பவர், கோவில் கருடகம்பத்தை அமைத்துள்ளார்; இதற்காக, கிராம சலகெருதை, முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் அழைத்து வந்து, விழா கொண்டாடியுள்ளனர் என்பது தெரியவந்தது. வழக்கமாக கருடகம்பங்கள் எட்டு பட்டைகளுடன் அமைந்திருக்கும். ஆனால், வேலுாரிலுள்ள கம்பம், 16 பட்டைகளுடன், அணிகலன்கள் போன்ற சிற்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும். கம்பத்தை சுற்றிலும் மண்டபம், கூரைப்பகுதியில் கல்வெட்டு பல்வேறு வித்தியாசமான அமைப்புகள் காணப்படுகிறது. தங்கள் கிராமத்தின் சலகெருதுவை தெய்வமாக கருதி, அனைத்து, திருப்பணிகளுக்கு முன்பும், அவற்றுக்கு, சிறப்பு பூஜைகள் நடத்தியுள்ளது தெரியவருகிறது.
கல்வெட்டு ஆய்வாளர் சுந்தரம் கூறுகையில், ‘‘தங்கள் கிராம கோவிலில் உள்ள, கல்வெட்டு மற்றும் அதன் வரலாற்றை தெரிந்து கொள்ள, வேலுார் மக்கள், அதிக ஆர்வம் காட்டினர். படியெடுத்தல் உட்பட பணிகளுக்கு, இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் உதவினர். இவ்விநாயகர் கோவில் கருடகம்பம், 173 ஆண்டுகளுக்கு முன்பும், அதற்கு முன்னரே கோவிலும் கட்டப்பட்டிருக்க வேண்டும். கிராமங்களிலுள்ள வரலாற்று ஆவணங்களை பாதுகாத்து, அது குறித்த விழிப்புணர்வு பெறுவதில், வேலுார் கிராம மக்களை பிறரும் பின்பற்ற வேண்டும்,’’ என்றார். –நமது நிருபர்–