பதிவு செய்த நாள்
01
ஏப்
2017
12:04
ஓசூர்: பாகலூர், கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், இரு மாநில பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஹெலிகாப்டர் மூலம், தேர் மற்றும் கோவில் மீது பூக்கள் தூவப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலூர் கிராமத்தில், 100 ஆண்டு பழமையான கிராம தேவதை கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, திருவிழா ஆண்டுதோறும் தெலுங்கு வருடப் பிறப்பான, யுகாதியை முன்னிட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த, 29 காலை, 9:30 மணிக்கு, வி?ஷச பூஜையுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை, 10:00 மணிக்கு ரத பிரதிஷ்டை, ஹோமம் நடந்தது. மதியம், 12:10 மணிக்கு, அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி தேரை வடம் பிடித்து துவக்கி வைக்க, ஹெலிகாப்டர் மூலம் தேர் மற்றும் கோவில் மீது மூன்று முறை பூக்கள் தூவப்பட்டன. முக்கிய வீதிகளில் வலம் வந்த தேர் மீது, உப்பு, மிளகு, ஆமணக்கு விதை, வாழைப்பழம் ஆகியவற்றை மக்கள் வீசி வழிபட்டனர். தமிழகம், கர்நாடகா என இரு மாநிலத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை, தேர் நிலையை அடைந்தவுடன், இரவு, 9:00 மணிக்கு கிராம தேவதை கோட்டை மாரியம்மன் பல்லக்கு, உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நாளை (ஏப். 2) நள்ளிரவு, 12:00 மணிக்கு திரவுபதி அம்மன் கரகம் நிகழ்ச்சி நடக்கிறது.