பதிவு செய்த நாள்
03
ஏப்
2017 
12:04
 
 திருப்பூர்;பெருந்தொழுவில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. திருப்பூர், பெருந்தொழுவில், பழமை வாய்ந்த ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத விண்ணளந்த பெரிய பெருமாள் கோவிலில், கோபுரம், பிரகாரம், திருமதில், கருடகம்பம் போன்றவை ஆகம விதிப்படி அமைக்கப்பட்டு திருப்பணி நிறைவுற்றது. அதன்பின், கும்பாபிஷேக விழா, ஸ்ரீவாசுதேவ புண்யாஹ வாசனம், திருவாராதனம், பகவத் அனுக்ஞையுடன், மார்ச் 30ம் தேதி துவங்கியது. அதன்பின், திருப்பாவை கோஷ்டி, புனித நீரை ஊர்வலமாக எடுத்து வருதல், காப்ப கட்டுதல், கோமாதா பூஜை, யாகசாலை பிரவேசம், முதல் கால கும்ப மண்டல யாகபூஜைகளும், அன்று மாலை, இடர்களையும் நாதனுக்கு இரண்டாம்கால கும்ப மண்டல யாகபூஜையும் நடைபெற்றது.
கடந்த, 1ம் தேதி காலை, மூன்றாம் கால கும்ப மண்டல யாக பூஜைகளும், நவரத்ன யந்த்ர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், பூர்ணாகதி சாற்றுமறை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில், 81 கலச திருமஞ்சனம், கோ பூஜை, கன்யா பூஜை, திருமூர்த்திகளின் திருக்கண் திறத்தல், நான்காம் யாக கும்ப மண்டல யாகபூஜைகளும் நடைபெற்றது. நேற்று காலை, 6:00 மணிக்கு, ஐந்தாம் கால கும்ப மண்டல யாக பூஜை, மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம், தசதான நிகழ்வுகளை தொடர்ந்து, கடங்கள் புறப்பாடு துவங்கியது. காலை, 9:00 மணி முதல், 10:30 மணிக்குள், விமானங்களுக்கும், மூலவ மூர்த்திகளுக்கும், மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை தரிசித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், "கோவிந்தா, கோபாலா என கோஷமிட்டனர். அதன்பின், அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.