பதிவு செய்த நாள்
05
ஏப்
2017
11:04
இளையான்குடி: இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அக்கோயில் பங்குனி விழா மார்ச் 28 இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 29 முதல் ஏப்., 3 வரை சிம்மம், குதிரை, காமதேனு, அன்னம், பூத வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார். நேற்று பொங்கல் விழா நடந்தது. பக்தர்கள் கோயில் முன் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஆடு, கோழிகளை பலியிட்டனர். தீச்சட்டி, கரும்பு தெட்டில், பொம்மை எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
இன்று தேரோட்டம் நடக்கிறது. நாளை பால்குட ஊர்வலம் நடக்கும். அன்று மாலை 6:15 மணிக்கு அம்மன் ஊஞ்சல் ஆடுதல், இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 7 இரவு 8:00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கும். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செய்து வருகிறார்.
மானாமதுரை: பொங்கல் விழாவையொட்டி காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பலர் தாயமங்கலம் கோவில் இருக்கும் திசையை நோக்கி மானாமதுரையில் தாயமங்கலம் ரோட்டில் ஊருக்கு வெளியே உள்ள வயல் காடுகளில் பொங்கல் வைத்து, ஆடு,கோழி பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதே போன்று மானாமதுரை பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் இதே போன்று ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர்.