தஞ்சாவூர்: கும்பகோணத்தில் ராமநவமி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் ராமசுவாமி கோவிலில் கோலகலமாக நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு திருத்தேரின் வடம் பிடித்தனர்.
கும்பகோணத்தில் உள்ள 5 முக்கிய வைணவ கோவில்களுள் ஒன்றாக கும்பகோணம் ராமசாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலின் மூலஸ்தானத்தில் பட்டாபிஷேக கோலத்தில் ராமரும், சீதையும் காட்சி அளிக்கின்றனர். மேலும், இந்த கோவிலின் உற்சவமூர்த்தி கோதண்டம்(வில்) ஏந்தி கல்யாண ராமனாகவும் காட்சி தருகிறார். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ராமநவமி விழா ஆண்டுதோறும் 10 நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு இந்திர விமானத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. விழா நாட்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடக்கிறது. இதனை தொடர்ந்து ஒன்பதாம் நாள் விழாவாக இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் திருத்தேரின் வடம்பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.