பதிவு செய்த நாள்
04
நவ
2011
10:11
திருவனந்தபுரம் : பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய சுப்ரீம் கோர்ட் நியமித்த குழுத் தலைவரை, மத்திய அரசு திடீரென மாற்றியது சர்ச்சையை எழுப்பியுள்ளது. சுப்ரீம் கோர்ட் நியமித்தவரை மாற்ற, மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டா என, சில தரப்பில் கேள்வி எழுந்துள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பிரசித்திப் பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் பாதாள அறைகளில், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை மதிப்பீடு செய்ய, தேசிய அருங்காட்சியக இயக்குனர் டாக்டர் ஆனந்தபோஸ் என்பவர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தது. இக்குழு கோவிலில் மதிப்பீடு செய்வதற்கு முன், நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்து, இடைக்கால அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அவ்வறிக்கையின்படி, கோவிலில் திறக்கப்படாமல் உள்ள, "பி அறையைத் தவிர, பிற அறைகளைத் திறந்து பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, மதிப்பீடு பணிகளுக்கான அதிநவீன கேமரா பொருத்துதல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பணிகளில் குழுவினர் இறங்கியுள்ளனர். இந்நிலையில், அக்குழுவின் தலைவர் ஆனந்தபோசை, மத்திய அரசு திடீரென பதவியிலிருந்து நீக்கிவிட்டது. அவரது பதவிக்காலம் செப்., 20ம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், சுப்ரீம் கோர்ட் நியமித்த நபரை அப்பதவியில் இருந்து நீக்க, அரசுக்கு அதிகாரமுண்டா என்பது தற்போது சர்ச்சைக்குரிய விஷயமாகி உள்ளது. அவர் பொக்கிஷ மதிப்பீடு பணியில் தலைவராக இருப்பதில், அரசுக்கு ஆட்சேபம் இருப்பின், அதுகுறித்து முறைப்படி சுப்ரீம் கோர்ட்டிடம் தெரிவித்திருக்க வேண்டியது தானே என, சட்ட வல்லுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.