பதிவு செய்த நாள்
04
நவ
2011
10:11
மதுரை:""மதுரை தெப்பக்குளத்தில் சுப காரியங்களின் போது, பொதுமக்கள் தலா ஒரு குடம் நீர் ஊற்றுவதை வாடிக்கையாக மாற்றலாம். இதனால் சாக்கடை நீர் நிரம்புவதை தவிர்க்கலாம், என மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ.,நன்மாறன் கூறினார்.அவர் கூறியதாவது: மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட தெப்பக்குளம் மதுரைக்கு பெருமை சேர்க்கிறது. ஒரு காலத்தில், அருகிலுள்ள மக்கள் தெப்பக்குள நீரை சமையல் மற்றும் இதர பணிகளுக்கு பயன்படுத்தியுள்ளனர். அதிக குழந்தைகளை பாதுகாத்த அன்னை இன்று, முதுமை நிலையில் அயர்ந்து இருப்பதைப்போல் நீரற்று கிடக்கிறது. குளத்தால் பயனடைந்த மக்கள், இதை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளனர். தற்போது, தெப்பத் திருவிழாவின் போது தான் இது கவனிக்கப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் நீர் நிரப்புவது என்ற முடிவால், ஓரளவு நல்ல தண்ணீர், கழிவு நீர் கலந்து விடப்படுகிறது. நான் எம்.எல்.ஏ.,வாக ஆனபோதுவரை இது நீடித்தது. தேரை வடம் பிடித்து இழுக்கும் மக்கள் துர்நாற்றத்தை சகிக்க முடியாமல் ஒரு கையால் வடம், ஒரு கையால் மூக்கை பிடித்துக்கொண்டு பணியை நிறைவேற்றினர். நான் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.வைகையை நம்பி இக்குளம் உள்ளது. வைகையிலிருந்து தண்ணீர் வந்த பாதை அடைபட்டுள்ளது. வைகை ஆறு மிக தாழ்வாகவும், தெப்பக்குளம் மேடாகவும் உள்ளதால் சீராக நீர் வரவில்லை என அரசு விளக்கம் அளித்தது. தண்ணீர் நிரப்புவதில், மக்களின் சுய முயற்சி தேவை. உண்டியலில் பணம்போடுவதுபோல், தெப்பக்குளத்தில் தலா ஒரு குடம் நீர் ஊற்றலாம். இதனால், தெப்பக்குளம் நிறையுமா என அறிஞர்கள் வினவலாம். சிறுதுளி பெருவெள்ளம்.தெப்பக்குளத்தைச் சுற்றி பள்ளிகள், திருமண மண்டபங்கள், குடியிருப்புகள் அதிகம் உள்ளன. சுப காரியங்களின் போது, பொதுமக்கள் தலா ஒரு குடம் நீர் ஊற்றுவதை வாடிக்கையாக மாற்றலாம். இதனால் சாக்கடை நீர் நிரம்புவதை தவிர்க்கலாம். ஜாதி, மத வேறுபாடின்றி இக்கடமையை நிறைவேற்ற வேண்டும்.விளக்குத்தூண் பகுதியில் வீணாகும் மழை நீரை, தெப்பக்குளம் நோக்கி திருப்ப வேண்டும் என்றார்.