தேனி: தேனி அருகே உப்பார்பட்டியில் இருந்து சஞ்சீவி மலையடிவாரத்திற்கு செல்லும் வழியில் அரசமரம் அடியில் காவல் தெய்வமான பாண்டி முனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு முறுக்கு மீசையுடன் ஐந்தரை அடி உயரத்தில் முனீஸ்வரர் சிலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. பக்தி கமழும் இந்த கோயிலில் வேண்டியவருக்கு நினைத்த காரியம் நிறைவேறி வருகிறது. தினமும் ஒரு கால பூஜை நடக்கிறது. இயற்கை சூழ்ந்த இந்த கோயிலில் எப்போதும் சுவாமி பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். வழிப்போக்கர்களுக்கு முனீஸ்வரர் துணையாக இருந்து வருகிறார்.
பூஜாரி பாண்டி கூறுகையில், “பல ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் கோயில் இருந்துள்ளது. காலப்போக்கில் இந்த அரசமரம் அடியில் பெரிய அளவில் கோயிலாக உருவாக்கப்பட்டது. மூன்று தலைமுறையாக பாண்டி முனீஸ்வரரை வழிபட்டு வருகிறோம். கோயிலை சுற்றி முத்துமாரியம்மன், நாடாசன்னாசி, செல்வகணபதி போன்ற துணை தெய்வங்கள் அமைந்துள்ளன. இக்கோயில் இப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு மனம் உருகி வேண்டும் பட்சத்தில், அவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். பங்குனி உத்திரம், சித்திரை , தை மாத பிறப்பு போன்ற நாட்களில் கோயிலில் சிறப்பு வழிபாடு நடக்கும்,” என்றார்.