பதிவு செய்த நாள்
08
ஏப்
2017
11:04
ஸ்ரீவில்லிபுத்துார்: மாசற்ற உள்ளத்தால் இறைவனிடம் வேண்டும் வேண்டுதல்கள் தடையின்றி நிறைவேறும். அதிலும் இறைவனிடம் சரணாகதியடைந்து வேண்டும்போது, எத்தகைய தடைகளும் தகர்த்தெறிந்து வேண்டியர்களின் வேண்டுதல்களை நிறைவேறும் போது இறைவனின் ஆற்றலை நாம் உணர்கிறோம். இன்று வசதி வாய்ப்பு, செல்வாக்கும் அதிகரித்து இருந்தாலும் தங்கள் பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், பிரச்னையில்லாத வாழ்க்கை என்பதையே அனைத்து தரப்பு பெற்றோர்களும் விரும்புகின்றனர். இதில் உயர்ந்தவன், தாழ்ந்தவன், வசதி படைத்தவன், வசதியில்லாதவன், பதவி, அதிகாரம் இருப்பவர் மற்றும் இல்லாதவர் என எந்த வேறுபாடும் இல்லை. மனிதனாக பிறந்த ஒவ்வொருமே ஏதாவது பிரச்னையில் சிக்கி தவிக்கின்றனர்.
இதிலிருந்து விடுபட இன்று இறைவனை வேண்டுவோர்களே அதிகம். தங்கள் குலதெய்வக்கோயில் முதல் ஜோசியர்கள் சொன்ன கோயில்கள் மட்டுமன்றி, பலனடைந்த மற்றவர்கள் சொன்ன கோயில்கள் என பல்வேறு கோயில்களுக்கு செல்லும் குடும்பஸ்தர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்து, அரங்கனை காதலித்து மணந்த ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளின் சன்னிதியில் வேண்டும்போது, அவைகள் நிறைவேறி வருகிறது என்பதற்கு இங்கு வந்து சென்ற அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகளே சாட்சி.
இத்தகைய பெருமைவாய்ந்த ஆண்டாளிடம் தங்கள் பிள்ளைகளின் திருமணம் குறித்து வேண்டுதல் போட்டு, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையையும், கிளியையும் பெற்று தங்களின் வீட்டு பூஜையறையில் வைத்து வணங்கும்போது, பல நாட்களாக தடைபட்டு வந்த திருமணங்கள் எல்லாம் சீரும், சிறப்புமாக நடந்தேறியுள்ளது. மேலும் பலர் பணியில் பதவி உயர்வு, தொல்லைகள் இல்லாத பணியிடம், தொழிலில் மேன்மை, பணநெருக்கடி குறைந்து ஐஸ்வர்யம், திருமண தம்பதிகளுக்கு மக்கட்பேறு எனும் பல உயர்வினை, நன்மையை பெற்று சென்றவர்கள் ஏராளம். இத்தகைய சிறப்புகளை தரும் ஆண்டாள் திருக்கல்யாணம் ஆண்டுதோறும் பங்குனி பங்குனி உத்திரநாளன்று இரவு 7:00 மணிக்குமேல், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள்கோயிலில் சீரும், சிறப்புமாக நடப்பது வழக்கம். தற்போதும் நாளை(ஏப்.9) இரவு 7:00 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இதில் பங்கேற்று தங்களின் ஆண்டாள்,ரெங்கமன்னார் திருவருள் பெற்று, தங்கள் வாழ்க்கையில் ஐஸ்வர்யங்களை பெறலாம்.